சென்னையை பதற வைத்த செயின் பறிப்பு சம்பவங்கள் – யார் இந்த இரானி கொள்ளையர்கள் ?
4 மாநில போலீசாருக்கு சவால் விடும் இந்தக் கொள்ளையர்களில் முக்கியமான கொள்ளையன் ஜாபர் சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார். அவரின் கூட்டாளிகள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையை பதற வைத்த இரானி கொள்ளையர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 25-ம் தேதி அதிகாலையில் சென்னையில் மக்கள் வழக்கம் போல தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சென்னை நந்தனம் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா அணிந்திருந்த 2 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல் நிலையத்தில் இந்திரா, சார் கறுப்பு, சிவப்பு நிற பல்சர் பைக்கில் வந்த இருவர் செயினை அறுத்துப் போயிட்டாங்க. அவர்கள் ஹெல்மெட், முகமூடி அணிந்திருந்ததால் முகத்தை சரியாக பார்க்கவில்லை. எப்படியாவது என் செயினை கண்டுபிடிச்சு கொடுங்க என கண்ணீர் மல்க கூறினார்.

இதைப் போல சென்னை சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில் வாக்கிச் சென்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அம்புஜம்மாளிமிருந்து 3 சவரன் செயின் பறிக்கப்பட்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இந்தச் சம்பவம் நடந்து அடுத்த 15-வது நிமிடத்தில் இந்திரா நகர், 29-வது குறுக்குத் தெருவில் நடந்துச் சென்ற திருவான்மியூரைச் சேர்ந்த லட்சுமி என்பவரிமிருந்து 8 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டதாக மற்றொரு தகவல் காவல் நிலையத்துக்கு கிடைத்தது. இப்படி காலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள் 6 சம்பவங்கள் நடந்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமே பரபரப்பானது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன், தென்சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாக களமிறங்கினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயின் கொள்ளையர்களைத் தேட தொடங்கினர். முதற்கட்ட 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி-க்களை ஆய்வு செய்தபோது கறுப்பு, சிவப்பு நிற பல்சர் பைக்கில் வந்த இருவர் செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. காலில் ஷு, டிப்டாப் உடைகள் என வடமாநில இளைஞர்கள் போல அவர்கள் இருந்தனர்.

அப்போதுதான் தனிப்படை போலீஸ் டீமிலிருந்த காவலர் ஒருவர், சார், இவர்கள் சிசிடிவியை பார்த்து பயப்படவில்லை. சிசிடிவி உள்ள பகுதிகளில் கூட தைரியமாக செயினை அறுக்கிறார்கள். மேலும் அவர்களின் தொடை, இரானி கொள்ளையர்களைப் போல உள்ளது என ஒரு தகவலைத் தெரிவித்தார். இரானி கொள்ளையர்களா என உஷாராகிய கூடுதல் கமிஷனர் கண்ணன், அவர்கள் ரயில், விமானத்தில் அல்லவா வருவார்கள், உடனே அங்கெல்லாம் டீமை அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் ரயில் நிலையங்கள், விமான நிலையத்தில் தனிப்படையினர் ஆஜராகினர். இதற்கிடையில் இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபடி கொள்ளையர்களை பின்தொட்ர்ந்து சென்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏழாவது மாடியில் உள்ள சென்னையின் ஓட்டுமொத்த சிசிடிவி கேமராக்களின் கண்ட்ரோல் ரூம்பிற்குச் சென்ற தனிப்படை போலீஸார், கொள்ளையர்கள் கிண்டியிலிருந்து விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள் என தகவலை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் தெரிவித்தனர். உடனே சிபிசக்கரவர்த்தியின் வாகனம் விமான நிலையம் நோக்கி சென்றது. டிராபிக் சிக்கிக் கொண்டால் என யோசித்த சிபிசக்கரவர்த்தி உடனடியாக விமான நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியை போனில் தொடர்பு கொண்டு கடைசி நேரத்தில் விமான டிக்கெட் வாங்கியவர்கள், போர்டிங் பாஸ் வாங்கிய விவரங்களை சேகரிக்க கூறினர். அதன்படி இன்ஸ்பெக்டர் பாண்டியும் விமான நிலையத்துக்குள் சென்று விவரங்களைச் சேகரித்தார். அப்போது மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி, ஜாபர் குலாம் உசேன் இரானி ஆகியோரின் பெயர்களில் டிக்கெட் வாங்கப்பட்டிருந்ததும் மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி ஐதராபாத்துக்கு காலை 9.15 மணியளவில் செல்லும் விமானத்தில் ஏறியிருக்கும் தகவல் கிடைத்தது.

அப்போது மணி காலை 8.55, இன்னும் 20 நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விடும் என்பதால் இன்ஸ்பெக்டர் பாண்டி, இந்தத் தகவலை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் தெரிவித்தார் அப்போது விமான நிலையத்துக்குள் சிபிசக்கரவர்த்தி நுழைய, போனிலேயே விமான நிலைய அதிகாரிகளிடம் விவரத்தைக் கூறி சிங்கம் பட சூர்யாவைப் போல விமான நிலைய ஓடும்பாதையை நோக்கி ஓட்டம்பிடித்தார். அவரைத் தொடர்ந்து தனிப்படை போலீஸாரும் அங்குச் சென்றனர். பைலட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்து மூலம் விமானம் நின்ற பகுதிக்குச் சென்ற இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, 12-ம் நம்பர் இருக்கையை பார்த்தார். அதில் உட்காந்திருந்தவரிடம் ஐஎம் ஜே.சி, வாட்டிஸ் யூவர் நேம் என கேட்டார். அதற்கு தன்னுடைய பெயரைக் கூறியதும் இவரில்லை, என விமானத்தில் அமர்ந்திருந்தவர்களை உற்றுப்பார்த்தார் சிபிசக்கரவர்த்தி, அப்போது தலையை குனிந்தப்படி இளைஞர் ஒருவர் 14-ம் நம்பர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அவரின் வலது கையில் கட்டியிருந்த கறுப்பு கயிறை சிசிடிவியில் பார்த்த ஞாபகம் சிபிசக்கரவர்த்திக்கு வர, மிஸ்டர் உங்க பெயர் மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி தானே என கேட்டார். அதற்கு அந்த இளைஞர், யெஸ், நீங்கள் யாரு என கேட்க, சிபிசக்கரவர்த்தி கீழே இறங்குங்கள் என மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானியிடம் கூறினார். அதற்கு அவர் நான் ஏன் இறங்க வேண்டும் என ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நீங்கள் ஒரு செயின் பறிப்பு கொள்ளையன் என பதிலளித்தார் சிபிசக்கரவர்த்தி. நோ… நான் கொள்ளையன் அல்ல என மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி அடம்பிடித்த விமான நிலைய ஊழியர்களும் சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்குள் வந்த சிபிசக்கரவர்த்தி, உன்னோடு கூட வந்தவன் எங்கே என கேட்க அப்படியாரும் வரவில்லை என பதிலளித்தார் மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி.
அதற்குள் இன்ஸ்பெக்டர் பாண்டி, சார் அவன் மும்பை செல்லும் விமானத்துக்கு போர்டிங் பாஸ் வாங்க வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கான் என தகவலைத் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஜாபர் குலாம் உசேன் இரானியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு முழு ஏற்பாடுகளைச் செய்த சல்மான் உசேன் இரானி எனத் தெரியவந்தது. அவர் நகைகளோடு ரயில் மூலம் ஐதராபாத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீஸார் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியை நாடினர். அப்போது சல்மான் உசேன் இரானி, சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் காவாளி என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது. உடனடியாக ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆந்திரா ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து சல்மான் உசேன் இரானியை கைது செய்து தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் அடுத்தடுத்து நடந்த செயின் பறிப்பு சம்பவங்களில் இரண்டே மணி நேரத்தில் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர். அதனால் போலீஸாரும் பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். கடந்த 26-ம் தேதி குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பல்சர் பைக்கை பறிமுதல் செய்ய ஜாபரை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீஸார் தரமணி ரயில் நிலையம் பகுதிக்குச்சென்றனர். அங்கு பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்த ஜாபர், தனிப்படை போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். சுதாரித்துக் கொண்ட போலீசார், ஜாபரிடமிருந்து தப்பினர்.

அப்போது தற்பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, கொள்ளையன் ஜாபரை நோக்கி சுட்டார். இதில் ஜாபரின் மார்பில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் சம்பவம் ஜாபரின் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு சென்னையில் செயின் பறிக்க போடப்பட்ட பிளான் குறித்து மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானியும் சல்மான் உசேன் இரானியும் தனிப்படை போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 26.5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர், மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், மும்பை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாவார். மகாராஷ்ட்ரா மாநில போலீசார் வெளியிட்ட 20 செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஜாபர் 3-ம் இடத்தில் இருக்கிறார். இவரின் அப்பாவும் குற்றப்பின்னணியைக் கொண்டவர். ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தகவலைக் கேள்விபட்ட மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநில போலீசார் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. இவரின் குடும்பமும் குற்றப்பின்னணியைக் கொண்டது. இவரின் அம்மா மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. அடுத்து சல்மான் உசேன் இரானி, மீது 45 குற்ற வழக்குகள் உள்ளன. திருந்தி வாழ்வதாக கூறிய இவர், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் மற்ற மாநிலங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த இரானி கொள்ளையர்கள் அதிகளவில் மும்பையில் குடியிருக்கிறார்கள். இவர்கள் கொள்ளையடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி விட்டால் அவர்களை கைது செய்ய முடியாது. ஏனெனில் கைது செய்ய செல்லும் போலீசாரை இரானி கொள்ளையர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் அரண் போல செயல்பட்டு தப்பிக்க வைத்து விடுவார்கள். இவர்களில் கொள்ளையடிக்க ஒரு டீம்., நகைகளை விற்க இன்னொரு டீம், வழக்குகளிலிருந்து தப்பிக்க வழக்கறிஞர் டீம் என தனித்தனியாக டீம்கள் உள்ளன.
கொள்ளையடிப்பது தொடர்பாக இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் விமானத்தில் வந்து செயின்பறிப்பில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரே மணி நேரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்து விட்டு விமானத்தில் எஸ்கேப் ஆகுவதுதான் இரானி கொள்ளையர்களின் ஸ்பெஷல் என்கிறார்கள் சென்னைப் பெருநகர போலீசார்.